ராமநாதபுரம் கடல் அன்னைக்கு பொங்கல் விழா
கடல் அன்னைக்கு பொங்கல்
ராமநாதபுரம் R.S. மங்கலம் தாலுகா உப்பூர் அருகே உள்ள மோர்பண்ணை கிராமத்தில் மீனவ மக்கள் அதிகமாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கடல் அன்னைக்கு கிராமத்தின் சார்பில் கிராம தலைவர் தலைமையில் ஊரின் நடுவே அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ரணபத்ரகாளியம்மன் ஆலயத்தின் முன்பாக சப்த கன்னிகளாக ஊரில் உள்ள 7 பெண் குழந்தைகள் தேர்வு செய்து அந்த சப்த கன்னிகளின் மூலம் ரணபத்ரகாளியம்மன் கோவில் முன்பாக பொங்கல் வைப்பது வழக்கம்.
முன்னதாக கிராமம் சார்பில் தேர்ந்ததெடுக்கும் 7 கன்னி பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் 30 நாட்கள் விரதமிருந்து கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு ஊர் காவல் தெய்வமான முனியய்யா கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று வழிபட்டு அங்கிருந்து ஸ்ரீ ரண பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்து கோவிலுக்கு முன்பு 7 பானைகளில் வைத்து பின் பொங்கல் படையலிட்டு வழிபடுகின்றன்.
அதனை தொடர்ந்து கோவிலில் முன் வைத்திருந்த கும்பங்களை சப்தகன்னிகள் எடுத்து தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலமாக வந்து கடற் கரையை வந்தடைந்தனர். பின் சிறிய படகு ஒன்றை ஊர் தலைவர் சுமந்துவர அதன்பின்பு சப்தகன்னிகள் கும்ப பொங்கலை சுமந்து கடற்கரை வந்தடைந்து கடற்கரையில் சில சம்பிரதாயங்கள் செய்து கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கொண்டுபோய் அனைத்தையும் கடல் அன்னைக்கு சமர்ப்பித்துவிட்டு திரும்பி வந்தனர்.
இந்த நடைமுறை நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிராம மக்கள் சார்பாக கரகாட்டம் நிகழ்ச்சிகள் கிராமிய கலைகள் நடைபெற்றது.