ராமநாதபுரம் விவசாயிகளுக்கு கருத்தரங்கு
ராமநாதபுரம் விவசாயிகளுக்கு கருத்தரங்கு
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாய்வு.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாய்வு நடைபெற்றது. திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எம்.கே. அமர்லால் தெரிவித்ததாவது, விவாசாயிகளிடம் பசுந்தாள் உரப்பயிர்களில் ஒன்றான சணப்பையை தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும், தக்கைப்பூண்டு, கொழிஞ்சி, சணப்பை போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழும் போது உரமாகிறது. இவ்வாறு பூ பூக்கும் சமயத்தில் மடக்கி உழுவதால் காற்றிலுள்ள நைட்ரஜன் உறிஞ்சப்பட்டு மண்ணுக்குக் கிடைக்கிறது. மேலும் இந்த செடி மக்கி மண்ணுடன் கலந்து விடுவதால் கரிம, கனிம சத்துக்கள் கிடைக்கிறது. அத்துடன் மண்ணில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.. இதனால் மண்ணின் நீர் உறிஞ்சும் திறன் அதிகரித்து நல்ல மகசூல் பெற முடிகிறது. மேலும் நன்மை செய்யும் பூச்சிகள் பாதுகாக்கப்படுவதால் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் செலவு குறைகிறது என்று விளக்கம் அளித்தார். பின்னர் இராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேரசிரியர் முனைவர் பாலாஜி கலந்து கொண்டு தென்னை பயிரில் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன் வண்டு பூச்சிக்கள் ஏற்படுத்தும் சேதங்களை பார்வையிட்டு அவற்றை அங்கக முறை மற்றும் இரசாயன முறைகளில் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மைக்கு டிராக்டரில் இயங்கும் விசை தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையின் அடிப்புறத்தில் பீய்ச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 8 எண்கள் மஞ்சள் ஒட்டுப்பொறிகளின் 5x1½ நீளமுள்ள மஞ்சள் ஒட்டுப்பொறிகளை தென்னை மரங்களுக்கு இடையே கட்டி அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது பசை தடவி வைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம் என்றார். இந்த கூட்டாய்வில் 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர், இக்கூட்டாய்வுக்கான ஏற்பாடுகளை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் பானுமதி மற்றும் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் மா.பவித்ரன் ஆகியோா் செய்தனா்.
Next Story