உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா
ராமானுஜர் ஜெயந்தி விழா
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த 4ம் தேதி ராமானுஜர் ஜெயந்தி விழா துவங்கியது. விழாவின் 6ம் நாளான இன்று காலை 6:30 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்திய பூஜைகள், 8:15 மணிக்கு ராமானுஜர் புறப்பாடாகி அனைத்து சன்னதிகளிலும் மங்களாசாசனம் நடந்தது. 10:30 மணிக்கு ராமர், லக்ஷ்மணன், சீதா, ஆஞ்சநேயர், ராமானுஜர்க்கு கண்ணாடி அறை மண்டபத்தில் விசேஷ அலங்கார திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம், வேத பாராயணம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள், சாற்று மறை, தீர்த்த பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11ம் தேதி ராமானுஜர் சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. ஜீயர் தேகளீசராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றும் விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் ஏஜென்ட் கோலாகலன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.