அரிய வகை நோய் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு சிகிச்சை

அரிய வகை நோய் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு சிகிச்சை

இலவச சிகிச்சை

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அரிய நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டி சர்க்கரை ஆலை அருகே உள்ள திருப்பாங்குட்டை பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 42), மகள் சுபாஷினி (12), மகன் பரத் (14). இவர்கள் 3 பேரும் மண்டலிய செம்முருடு (சிஸ்டமிக் லூபஸ் எரிதிமடோசஸ்) என்ற அரிய வகை நோயினால் அவதிப்பட்டு வந்தனர். பரத்துக்கு நோயின் தன்மை முற்றியதால் கண் பார்வை இழந்தார். இதற்கான சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை இலவசமாக தனியார் மருத்துவமனை வழங்கி வந்த நிலையில், மருந்துகளின் விலை அதிகம் என்பதால் தனியார் மருத்துவமனையும் கைவிட்டது.

அதைத்தொடர்ந்து ராகவனின் மனைவி வள்ளி உடனடியாக மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமியை நேரில் சந்தித்து தனது கஷ்டத்தை தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டீன் பாப்பாத்தியை தொடர்பு கொண்டு உதவும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, டீன் பாப்பாத்தி, அவர்களை அழைத்து தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்தார். மேலும், இந்த 3 பேருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க 8 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கவும், மருத்துவ சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இந்த மருந்துகளின் விலை சுமார் ரூ.20 ஆயிரம் ஆகும். ஆனால், இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது.இந்த நோயினால், பாதிக்கப்பட்ட நபர்கள் டாக்டர்களின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை மேற்கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என டீன் பாப்பாத்தி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story