சென்னைக்கு பார்சலில் கடத்தி வந்த அரிய வகை சிலந்திகள் பறிமுதல்!!
Rare Spider
சென்னை விமான நிலையத்திற்கு பார்சல் மூலம் அரிதான உயிரினங்கள் கடத்திவரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு போலந்தில் இருந்து அருப்புக்கோட்டையில் உள்ள நபருக்கு வந்த பார்சலை அதிகாரிகள் கைப்பற்றி, பிரித்து பார்த்தனர். அப்போது, வெள்ளி காகிதம், பஞ்சினால் சுற்றப்பட்டிருந்த அந்த பார்சலில் 108 சிறு சிறு குப்பிகள் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது, அதனுள் உயிருடன் சிலந்தி பூச்சிகள் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த வன விலங்குகள் குற்ற கட்டுப்பாட்டு அதிகாரிகள், பிடிபட்ட சிலந்திகளை ஆய்வு மேற்கொண்டனர். அதில், அவை தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் வாழும் அரிய வகையிலான டாரண்டுலாஸ் வகை சிலந்திகள் என்பது தெரியவந்தது. மேலும், அவற்றை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, தெரியவந்ததால் அதனை போலந்திற்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அதன்படி, சுங்க அதிகாரிகள் அவற்றை போலத்திற்கு அனுப்புதற்காக அஞ்சலக அதிகாரிகளிடம் வழங்கினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.