வாகன சோதனையில் 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்.
நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சீனிவாசன் தலைமையில் காவலர்கள் பாஸ்கர், ராணி, அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து மதுரையை நோக்கிச் சென்ற தனியார் கொரியர் சேயூல் சர்வீஸ் வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ரூ.7 கோடியே 86 லட்சம் மதிப்பிலான 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகள் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் வாகனத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் குறித்து வருமான வரி துறையினர் பரிசோதனை செய்த பிறகு நகைகளின் அளவீடுகள் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட பிறகே உரியவர் இடம் ஒப்படைக்கப்படும். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ராசிபுரம் கருவூல அலுவலகத்தில் ஒப்படைப்பதாக முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இதே போல் மூன்று முறை இந்த பகுதியில் தங்கம்,வெள்ளி பொருட்கள் வாகன சோதனையில் பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.