ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றத்தை கைவிடக்கோரி ஜூலை.18-ல் கடையடைப்பு நடத்திட முடிவு

ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றத்தை கைவிடக்கோரி ஜூலை.18-ல் கடையடைப்பு நடத்திட முடிவு
ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றத்தை கைவிடக்கோரி ஜூலை.18-ல் கடையடைப்பு நடத்திட முடிவு
ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையம் இடமாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சியினர், அமைப்புகள் பங்கேற்ற ராசிபுரம் நகர பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கூட்டத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக அண்மையில் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நகராட்சியில் கருத்து கேட்புக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில், ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையம் அமைக்க இடம் தேவைப்படுவதால் சரியான இடத்தில் 7 ஏக்கர் யாராவது தானமாக கொடுத்தால், பேருந்து நிலையம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நாளிலேயே அணைப்பாளையம் பகுதியில் 7 ஏக்கர் நிலம் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ஒருவரிடமிருந்து தானமாக பெறப்பட்டதால், பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பு எழுந்தது. நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே இடம் தேர்வு செய்துவிட்டு தேவையில்லாமல் கருத்துக் கேட்பு கூட்டம் கண்துடைப்புக்காக நடத்தியுள்ளது என பலரும் குற்றம் சாட்டினர். நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்ட அணைப்பாளையம் பேருந்து நிலையம் அமைக்க ஏற்ற இடமில்லை என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராசிபுரம் நகரின் தொழில், வர்த்தகம் பாதிக்கும் என கூறினர். இந்நிலையில், பல்வேறு கட்சியினர், சங்கங்கள், வியாபாரிகள், அமைப்புகள் பங்கேற்ற பேருந்து நிலைய மீட்புக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜூலை.18-ல் கடையடைப்பு நடத்த முடிவு: இக்கூட்டத்தில் பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து ஜூலை.18-ல் ராசிபுரம் நகரில் கடையடைப்பு போராட்டமும், ஜூலை.23-ல் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்திட ராசிபுரம் நகர பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு முடிவு செய்யப்பட்டது. இதில், அதிமுக பாலசுப்பிரமணியம், கந்தசாமி , வெங்கடாசலம், மதிமுக ஜோதிபாசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மும்பை அர்ஜுன், தமிழக தன்னுரிமை கட்சி நல்வினை செல்வம், தேமுதிக இளையராஜா, பாமக பாலு, பிஜேபி சேதுராமன், கம்யூனிஸ்ட் கந்தசாமி, கம்யூனிஸ்ட் மணிமாறன், மீனா, மக்கள் நீதி மய்யம் ஜெயபிரகாஷ், திராவிட விடுதலைக் கழகம் சேகுவேரா, தமுமுகவின் ரப்பானி, எஸ் டி பி ஐ நாசர், நாம் தமிழர் தனசேகர் , வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ், தமிழக வெற்றி கழகம் செந்தில்நாதன், மற்றும் பேருந்து உரிமையாளர்கள், வணிகர்கள், நகை வியாபாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story