ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் எஸ்.ஆர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மூலமாக 93 ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். துறையூரைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் உரிமையாளராக செந்தில் என்பவர் உள்ளார். ஒப்பந்த பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.480 நிர்ணையம் செய்யப்பட்டு, பிடித்தம் போக ரூ.390 வழங்கப்படுகிறது. மாதம் தோறும் 8 முதல் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்ட வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக 26ம் தேதி ஆகியும் இதுவரையில் சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனால் குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி செலவு, வீட்டு வாடகை, அன்றாட செலவுக்கு கூட செலவு செய்ய முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ராசிபுரம் நகராட்சி நிர்வாகம், எஸ் ஆர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு உரிய தொகை வழங்கியதாக கூறப்பட்டுள்ள நிலையிலும், இதுவரையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை, மேலும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை குப்பைகளை எடுத்து வந்து தரம் பிரித்து கொடுக்கும் பணியை செய்யும் எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனவும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ராசிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளுக்கும் செல்வதில்லை, தினசரி வருகை பதிவேட்டில் பதிவு செய்வதில்லை எனக் கூறி நேற்று பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் நகராட்சி தூய்மை அலுவலர் செல்வராஜ் சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் வேலைக்கு திரும்பினர். மேலும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு போதிய தூய்மை பணி உபகரணங்கள், மற்றும் சீருடைகள் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இவர்களுக்கு வழங்கிய குப்பை எடுக்கும் பேட்டரி வாகனமும், கைவண்டியும் முறையாக பராமரிப்பதும் இல்லை பலமுறை நகராட்சி நிர்வாக இடத்திலும் ஒப்பந்ததாரர் இடத்திலும் கூறியும் எந்த பயனும் இல்லை என வேதனை தெரிவித்தனர். ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ராசிபுரம் நகர மன்ற தலைவர் திருமதி கவிதா சங்கர் இடத்திலும் இது குறித்து புகார் தெரிவித்தினர். இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்த தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.