ராசிபுரம் அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியின் 1987-88-ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு மற்றும் 3-ம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதற்கான விழாவில், முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்பாளர் பி.சரவணன் தலைமை வகித்தார். சத்தியஅர்ஜூனன் வரவேற்றார். பள்ளியின் தலைமையாசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்துப் பேசினார். விழாவில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் தோல் மருத்துவத்துறைத் தலைவர் நிர்மலா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களின் நலன், எதிர்கால கல்வி உதவி திட்டங்கள் குறித்துப் பேசினார்.
இவ்விழாவில், 23-24-ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பயின்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் ஐந்து மாணவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையும், 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 7 மாணவர்கள் தலா ரூ.3 ஆயிரம் மேலும் சிறப்பிடம் பெற்ற 50 மாணவர்களுக்கு தலா ரூ.1000 என ரூ.1.10 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.
மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடப்பட்டன. விழாவில் குழந்தைகள் நல மருத்துவர் குமார், காவல் உதவி ஆய்வாளர்கள் சார்லஸ், குணசேகர், ரேணுகா, சவிதா, உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.