ராசிபுரம் : ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையையொட்டி, ராசிபுரம் பெரிய பள்ளி வாசல் அருகே ஈகை பெருநாள் திடலில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். நடப்பாண்டு தொடர் நோன்புக்கு பிறகு இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள மசூதிகளில் ரம்ஜான் பண்டிகை களைகட்டியுள்ளது.

ராசிபுரம் பெரிய பள்ளி வாசல் ஜாமியா மஸ்ஜித் அருகே நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 1000க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்று, தங்கள் ஈதல் திருநாளிலில் பெருநாள் திடல் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தொழுகையில் மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டியும், வெயில் தாக்கம் குறைய வேண்டியும், நல்ல மழை பொழிவு, மற்றும் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ இந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் வேண்டிக் கொண்டனர்.

தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி இளைஞர்கள், சிறுவர்கள் புத்தாடை அணிந்தும், உறவினர்களை உபசரித்தும் உற்சாகமாக கொண்டாடினர். ரம்ஜான் பண்டிகையின் முக்கிய நோக்கமான ஏழை, எளிய மக்களுக்கு இஸ்லாமியர்கள் உணவு அளித்து சிறப்பித்தனர்.

Tags

Next Story