ராசிபுரத்தில் பொங்கல் பரிசு
நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,02,993 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சில் பேசிய வனத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்ததாவது,
அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக கொண்டாட வேண்டும் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எண்ணம். அந்தவகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் சென்னையில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார்கள்.அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இயற்கை பேரிடரால் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை பகுதி மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6,000 மற்றும் தென் மாவட்டங்களில் மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.1,000 வழங்கினார்கள்.
மேலும், அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் நேரடியாக சென்று நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வந்தார்கள். மேலும், பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், வேட்டி, சேலை அறிவித்து வழங்கினார்கள். மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகை என பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு செயல்படுத்தி வருகின்றார்கள். தமிழ்நாட்டை தொழில் வளம் மிக்க மாநிலமாக உருவாக்கிடும் வகையில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தி உள்ளார்கள். இதன் மூலம் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 6.64 இலட்சம் கோடி முதலீடு பெறப்பட்டு, 27 இலட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக உள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 5,41,813 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.60.07 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறும் அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 4,07,022 நபர்களுக்கு ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் விலையில்லா சேலைகளும், 3,93,241 நபர்களுக்கு ரூ.4.86 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வேட்டிகளும் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் , இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், கூடுதல் பதிவாளர் சிவமுத்துக்குமாரசாமி, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் த.முத்துராமலிங்கம், உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.