ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து அரிசியை பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில், காவலர் கண்ணன் மற்றும் போலீசார் மலைக்கோட்டாலத்தில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒருவரது வீட்டில் அதிகளவு சாக்கு மூட்டைகள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்து, அதை பிரித்து பார்த்தனர். அதில், ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. விசாரணையில், அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தவர் மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்த பூமாலை மகன் ராஜா, 31; என்பதும், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, தீவனமாக அரைத்து கால்நடைகளுக்கு வழங்குவதும், மீதமுள்ள அரிசியை சாலையோர டிபன் கடைகளுக்கு விற்பனை செய்வதும் தெரிந்தது. தொடர்ந்து, ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும், 32 சாக்கு மூட்டைகளில் இருந்த 1,280 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
Next Story