ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது - 550 கிலோ அரிசி பறிமுதல்
கைது
சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசியை கடத்தும் மற்றும் பதுக்கும் நபர்களை போலீசார் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று மதியம் சேலம் எருமாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 11 மூட்டைகளில் சுமார் 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த வேனை ஓட்டி வந்த டிரைவரான நெத்திமேடு கே.பி.கரடு பகுதியை சேர்ந்த லோகநாதன் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதனை வட மாநிலத்தை சேர்ந்த நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு வேனில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் ரேஷன் அரிசியை கடத்தியதாக லோகநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கடத்தலுக்கு தொடர்புடைய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.