நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் : 146 வழக்குகள் பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் : 146 வழக்குகள் பதிவு!

ரேஷன் அரிசி கடத்தல் (பைல் படம்)

ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள், அவர்களுக்கு துணையாக இருப்பவர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 5 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் தொடர்பாக, 146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்மந்தப்பட்ட 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 36 டன் ரேஷன் அரிசி மற்றும் 17 சமையல் காஸ் சிலிண்டர்களை கைப்பற்றி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 29 வாகனங்களின் உரிமையாளர்கள்மீது, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ₹12 லட்சத்து 13 ஆயிரத்து 127 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் அரிசியை கோழிப்பண்ணைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, 5 மாதங்களில் 3 கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை மாட்டுத் தீவனமாக அரைத்து வழங்கும் மாவு மில் உரிமையாளர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்து, ரேஷன் அரிசியை உடைத்து குருணையாக மாற்றி எடுத்து வரும் கடத்தல்காரர்கள், அவர்களுக்கு துணையாக இருப்பவர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story