குமாரபாளையம் அருகே சாலையில் ரேசன் கடை தூண்: வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையின் நடுவே உள்ள தூண்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதி, அரசு கல்வியியல் கல்லூரி அருகே நகராட்சிக்கு சொந்தமான வாட்டர் டேங்க் உள்ளது. இதே வளாகத்தில் ரேசன் கடை கட்டுமான பணி நடப்பதாக கூறப்படுகிறது. இதன் ஒரு தூண், இந்த இடத்தின் சுற்றுச்சுவரை தாண்டி, அமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும், ரேசன் கடைக்கு, சரக்கு கொண்டு வரும் வாகனம் நிற்க இடையூறாக இருக்கும் என்பதால், இப்பகுதி பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மாதேஸ் கூறியதாவது: குடிநீர் டேங்க் உள்ள இடத்தில் எப்படி ரேசன் கடை கட்ட அனுமதி கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. மேலும், இந்த கட்டிடத்தின் ஒரு தூண், சாலையில் வரும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இது இவ்வழியே வரும் வாகனங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தும். மேலும் ரேசன் கடைக்கு சரக்கு கொண்டு வரும் வாகனம் வந்து சாலையில் நிறுத்தி சரக்குகள் இறக்கி வைக்கவும் பெரும் இடையூறாக அமையும். ஆகவே, நகராட்சிக்கு சொந்தமான ரேசன் கடை கட்ட, தட்டான்குட்டை ஊராட்சிக்கு சொந்தமான சாலையில் தூண் அமைப்பது சரியானது அல்ல.
இதனால் பலருக்கும் இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. இந்த தூணை வேறு இடத்தில் மாற்றி அமைத்து கட்டுமான பணியை செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.