விழுப்புரத்தில் 2வது முறையாக விசிக சார்பில் ரவிக்குமார் போட்டி
ரவிக்குமார்
விழுப்புரம் மக்களவைத்(தனி) தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாக ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.
விழுப்புரம் மக்களவைத்(தனி) தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாக ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பின்னர், இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி சிதம்பரம் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் பொதுச்செயலர் ரவிக்குமாரும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், மாங்கணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார்(64) எம்.ஏ.பி.எல். படிப்புடன் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவரது மனைவி செண்பகவல்லி, மகன்கள் ஆதவன், அதீதன். இவர் தற்போது விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் பகுதியில் வசித்து வருகிறார். 1999}ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த ரவிக்குமார், தற்போது கட்சியின் பொதுச் செயலராக உள்ளார். 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை காட்டுமன்னார் கோயில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றிய ரவிக்குமார், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இதே தொகுதியில் அவர் களம் காணுகிறார்
Next Story