தமிழக வளர்ச்சிக்கு யார் பங்களிப்பு அதிகமென அண்ணாமலை விவாதிக்க தயாரா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
கூட்டத்திற்கு பின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக பாஜகவுடன் கூட்டணி முறித்துக் கொண்டாலும் 'பி' டீமாக செயல்படுவதாகவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த அளவு கிடைத்த வெற்றி கூட இம்முறை அதிமுக.,வால் பெற முடியாது என்றார். முத்தலாக், சிஐஏ, காஷ்மீர் விவகாரங்களில் அதிமுக., எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனவும் இப்போது சிறுபான்மை மக்களின் காவலன் என கூறி ஏமாற்ற பார்ப்பதாகவும் பாஜக மற்றும் அதிமுகவினர் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் அது தமிழக மக்களிடையே எடுபடாது என தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது திமுக.,விடம் கூடுதல் இடம் கேட்டு பெறுவோம் என்றவர் தொகுதி உடன்பாடு சுமுகமாக நடைபெறும் எனவும் தெரிவித்தார். உண்மைக்கு மாறான விஷயங்களை மோடி துவங்கி அண்ணாமலை வரை பேசி வருகின்றனர் எனவும் அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது என்றவர், காவேரி டெல்டா பகுதி என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற ஞானமே இல்லாமல் ஞான சூனியமாக இருக்கின்றார் என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் தமிழக வளர்ச்சிக்கு யார் அதிகம் பங்களித்துள்ளனர் கம்யூனிஸ்டுகளா அல்லது பாஜகவா என பகிரங்கமாக விவாதிக்க அண்ணாமலை தயாரா? என கேள்வி எழுப்பினார். சிறுகுறு தொழில் முனைவோரின் நலன் கருதி தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டவர் வேறு பல மாநிலங்களுக்கு தொழில்கள் இடம் மாறும் நிலை இருப்பதை கருத்தில் கொண்டு தொழில் முனைவோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொழில் கடன்களை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திமுக கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய கால அவகாசம் உள்ளதாகவும் போக்குவரத்து ஊழியர் சம்பள விவகாரம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.
