ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் இணையவழியில் ரூ. 11 லட்சம் மோசடி
பட்டுக்கோட்டையை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் இணைய வழியில் ரூபாய் 11 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் இணையவழியில் ரூ. 11 லட்சம் மோசடி செய்த மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு 2023, நவம்பர் 20 ஆம் தேதி டெலிகிராம் செயலி மூலம் வந்த தகவல் வந்தது. அதில், இணையவழியில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய ரியல் எஸ்டேட் உரிமையாளர், மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 11 லட்சம் அனுப்பினார். அதன் பின்னர், ரியல் எஸ்டேட் உரிமையாளரின் அழைப்புகளை மர்ம நபர் எடுக்கவில்லை. இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் தஞ்சாவூர் சைபர் குற்றக் காவல் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story