குற்றால வெள்ளப்பெருக்கினால் அண்மைக்காலமாக நிகழும் மரணங்கள்: கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிடுளள்ள அறிக்கையில் பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு 17 வயது அஸ்வின் என்ற சிறுவன் இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய சம்பவம் ஆகும். குற்றாலத்தில் உள்ள பழைய அருவி, பிரதான அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்படக்கூடிய திடீர் மழையாலும் வெள்ளத்தாலும்,
அண்மைக்காலமாக மரண சம்பவங்கள் நிகழ்வது அனைவருக்கும் கவலை அளிக்கக் கூடியது. குற்றாலத்தில் மே மாதம் முதல் அக்டோபர், நவம்பர் வரையிலும் ஐந்தாறு மாதங்களுக்கு தொடர்ச்சியாகவும், விட்டுவிட்டு மழையும் சாரலும் வருவது வழக்கம். பொதுவாக பெரும் மழை, வெள்ளக் காலகட்டங்களில் அருவிகள் பெருக்கெடுத்து விழுகின்ற பொழுது பாதுகாப்புக் கருதி யாரையும் குளிக்க விடாமல் காவல்துறை தடுத்து விட முடிகிறது.
ஆனால், இது போன்ற பருவமற்ற காலகட்டங்களில் குறைந்த அளவு தண்ணீர் வருகின்ற பொழுது, திடீரென்று மலைக்கு மேலே பெய்யக்கூடிய அபரிமிதமான மழை மற்றும் வெள்ளப்பெருக்குகளை குளிக்க செல்வோரால் உணர முடிவதில்லை.
இன்று ஏற்பட்டது போல, அருவிக்கு மேலே 4,5 கிலோமீட்டர் அப்பால் மழை பெய்து ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்புகளை இனிமேல் நிரந்தரமாக தடுத்திட வேண்டும் என்பதே அனைத்து பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும். பள்ளி மாணவன் அஸ்வினின் மரணம் பெரும் துயரமானதாகும். அம்மாணவரின் உயிரிழப்பிற்கு மாநில அரசு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும் எனவும்; வருங்காலங்களில்,
இது போன்ற குற்றால வெள்ளப் பெருக்கினால் ஏற்படக்கூடிய மரணங்களை தடுக்கக்கூடிய வகையில் காவல்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பிற பாதுகாப்பு அம்சங்களையும்; பொதுப்பணித் துறையின் மூலம் செண்பகா அருவி அருகாமையில் ஒரு தடுப்பு அணை அமைக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.