ஸ்கேட்டிங்கில் காஞ்சிபுரம் மாணவர்கள் சாதனை



காஞ்சிபுரத்தில் 10 கி.மீ., 25 கி.மீ., மற்றும் லிம்போ பிரிவில் ஸ்கேட்டிங் செய்து ஐந்து மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் 10 கிலோமீட்டர், 25 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்தும், லிம்போ ஸ்கேட்டிங் பிரிவில் என 5 மாணவர்கள் சாதனை மேற்கொண்டு தனியார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
தற்போதைய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த விளையாட்டை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி, அதில் நேர்த்தியான பயிற்சிகள் மேற்கொண்டு சாதனைகளை மாநில , உலக அளவில் மேற்கொள்ள தயார் படுத்திக் கொண்டு அதில் வெற்றி கண்டு சாதனைகளை புரிந்து வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா அருகே செயல்பட்டு வரும் காஞ்சி ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் பயிற்சியாளர் பாபு தலைமையில், 200க்கும் மேற்பட்ட இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மூன்று வயதே ஆன சிறுவன் ஆத்விக் 10 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் தூரத்தை கடந்தும், குஷால் என்ற சிறுவன் இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தை 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் செய்து கடந்து சாதனை புரிந்துள்ளனர். மேலும் ஒரு அடி உயரம் உள்ள லிம்போ ஸ்கேட்டிங் எனும் தடுப்பின் கீழ் தீயினிடையே செல்லும் சாதனையில் 9 வயது சிறுவன் யஸ்வந்த் , 12 வயது சிறுவன் கோகுல்ராஜ், 8 வயது சிறுவன் நேமாறன் ஆகியோர் சாதனைகளை மேற்கொண்டு தனியார் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். இச்சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் நடுவர்கள் , பெற்றோர்கள், மாணவர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது என்பதும், தற்போதைய வளர் இளம் வயது நபர்களுக்கு ஊட்டச்சத்து தேவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை உணவுகள் அதன் பயன்கள் குறித்த கண்காட்சி இவ்வளாகத்தில் நடைபெற்றது.
சாதனை புரிந்த வீரர்களுக்கு தனியார் உலக சாதனை புத்தக நிர்வாகிகள் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி அவர்களை கவுரவப்படுத்தினர்.



