கேட்பாரற்று கிடந்த நான்கு நாட்டு துப்பாக்கிகள் மீட்பு
மொரப்பூர் அருகே சாலையோரம் கேட்பாராற்று கிடந்த நான்கு நாட்டு துப்பாக்கிகளை மொரப்பூர் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்று நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள், வருவாய்த் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலருமான சாந்தி உத்தரவிட்டார். மீறி நாட்டுத்துப்பாக்கி வைத்து இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இதையடுத்து துப்பாக்கி வைத்து இருந்தவர்கள் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே மொரப்பூர் பகுதியில் உள்ள சாலையோரம் 4 நாட்டுத் துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடப்பதாக வனத்துறைக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்த குமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 நாட்டுத்துப்பாக்கிகளையும் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது வன விலங்குகளை வேட்டையாட உரிமம் பெறாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர்கள் சாலையோரம் போட்டு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.