கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லூரி சார்பில் பானகம் வழங்கல்
குமரி மாவட்டம், கோட்டாறு அரசு ஆயுர் வேத மருத்துவ கல்லூரி சார்பில், நேற்று முதல் பானகம் விநியோகம் தொடங்கியுள்ளது. இதனை கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, கோடைக்காலத்தில் வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக உடலில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும். இதனை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆயுர்வேத மருத்துவ கல்லூரி 4வது பிரிவில் கோடைக்கால ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு டாக்டர் ரமேதா தலைமையிலான குழுவினர் கோடைக்கால நோய்கள் பற்றியும், அதனை தவிர்க்க என்ன செய்யலாம் என விளக்கம் அளிக்க உள்ளனர். இதுதவிர கோடைக்காலத்தில் உடலின் சூட்டை குறைத்து, தாகத்தை தணிக்க பானகம் சிறந்தது. இதனை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று 50 லிட்டர் பானகம் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.