மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு - விழிப்புணர்வு பேரணி

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு -  விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் பதிவு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு- 2023 தொடர்பான விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் சென்றடையும் வகையில் அரசினால் துவக்கப்பட்ட சமூக உரிமைகள் (ரைட்ஸ்) திட்டத்தின் ஒரு அங்கமாக சமூக தரவுகள் பதிவுப்பணி மற்றும் தகவல் தொடர்பு பணிக்கான விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி இன்று துவக்கி வைக்கப்பட்டது. மேலும், விழிப்புணர்வு பணியின் ஒரு அங்கமாக கலை குழுவினர்களைக் கொண்டு வீதி நாடகம் மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகளும் துவக்கி வைக்கப்பட்டது.

பேரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு தொடர்பான பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக நடமாடும் சிகிச்சை வாகனம் மூலம் மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேனரில் கையொப்பமிட்டு வாகன பிரசாரமும் இன்று துவக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த கணக்கெடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், பேச்சு பயிற்சியாளர் ராஜேஸ்வரி மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story