ஒற்றைக்காலுடன் முடங்கி கிடந்த முதியவருக்கு மறுவாழ்வு

ஒற்றைக்காலுடன் முடங்கி கிடந்த முதியவருக்கு மறுவாழ்வு
மாற்றுத்திறனாளி
ஒற்றைக்காலுடன் 3 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கி கிடந்த முதியவருக்கு, மறுவாழ்வு தந்த மக்களைத் தேடி மருத்துவ திட்டம்.

தஞ்சாவூர், மாநகராட்சிக்குட்பட்ட மகர்நோன்புச்சாவடி உக்கடை அம்பாள் காலனியில் வசித்து வருபவர் தேவதாஸ் (வயது 64), இவருக்கு 2021-ஆம் ஆண்டு, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயினால் அவரது வலது காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்றினர்.

தேவதாஸ் அப்போது முதல் ஒரே காலுடன் நடமாட்டம் இல்லாமல், படுத்த படுக்கையிலேயே மன வேதனையுடன் இருந்து வந்தார். இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெண் சுகாதார தன்னார்வலர் பவானி, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை தேவதாஸ் வீட்டிற்கு கொண்டு சென்றபோது அவரது நிலையை கண்டு அதனை இயன்முறை மருத்துவர் கி.கோகுலிடம் தகவல் தெரிவித்தார்.

இதனை அறிந்த இயன்முறை மருத்துவர் கோகுல், மக்களைத்தேடி மருத்துவ திட்ட சிகிச்சை காரில் தேவதாஸ் வீட்டிற்கே சென்று பரிசோதனை மேற்கொண்டதில், 3 ஆண்டுகள் நடமாட்டம் இல்லாமல் படுக்கையில் இருந்ததால் தேவதாசுக்கு இடதுகால் மற்றும் இடுப்பு தசைகளின் பலகீனம் இருப்பதை கண்டறிந்து அதனை சரிசெய்ய இயன்முறை பயிற்சி நெறிமுறையினை வடிவமைத்தார்.

அந்நெறிமுறையில் தசை மற்றும் மூட்டு வலுவடைய 5 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி வழங்கி வந்ததால், 3 ஆண்டுகளாகவே காலை வீட்டிலேயே படுத்த படுக்கையிலேயே இருந்ததை விட்டு, தேவதாஸ் வெளியில் வந்து தான் வசிக்கும் தெருவில் நடக்க தொடங்கினார்.

மேலும், அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் இரா.மகேஸ்வரி உத்திரவின்படி, தேவதாசுக்கு செயற்கைக் கால் பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி மாநகர்நல அலுவலர் டாக்டர்.வீ.சி.சுபாஷ்காந்தி வெள்ளிக்கிழமையன்று தேவதாஸ் வீட்டிற்கு சென்று அவரது உடல்நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து, அவருக்கு சிறப்பான சிகிச்சை மேற்கொண்ட இயன்முறை மருத்துவர் கோகுலுக்கு தேவதாஸ் கைகளால் பொன்னாடை அணிவித்திட செய்தார்.

மேலும், தேவதாஸ் மன உறுதிகொண்டு மருத்துவர் கோகுல் கூறிய இயன்முறை பயிற்சியை, தினந்தோறும் விடாமுயற்சியுடன் தவறாமல் செய்து வந்ததாலும், மக்களைத் தேடி மருத்துவ திட்டமுமே தற்போது நலமுடன் நடமாடுவதற்கு உதவியாக இருந்ததாக. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story