திருச்சுழி: ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம்

திருச்சுழி: ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

திருச்சுழி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு வெகு விமரிசையாக ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழப் பூலாங்கால் கிராமத்தில் ஸ்ரீ வீர ஜக்கதேவி கோவில் சித்திரைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

திருச்சுழி அருகே பரளச்சி அடுத்த கீழப் பூலாங்கால் கிராமத்தில் அருள்மிகு வீர ஜக்கதேவி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளுக்கான போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.

இந்த மாட்டு வண்டி பந்தயமானது கீழபூலாங்காலில் இருந்து துவங்கி கீழ்க்குடி வழியாக துத்திநத்தம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்க்கு நடைபெற்றது. இதில் 12 பெரிய மாட்டு வண்டிகளும், 28 சிறிய மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன. இந்த ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தில் கலந்து கொள்ள மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும், அதன் சாரதிகளும் கலந்து கொண்டனர். பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் புதுப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி அம்பலம் சிவபாலன் மாட்டுவண்டி முதல் பரிசான ரூ. 40 ஆயிரத்தை தட்டிச் சென்றது. இரண்டாம் பரிசான ரூ. 35 ஆயிரத்தை சித்திரங்குடி RGR மாட்டுவண்டி தட்டிச் சென்றது. மூன்றாம் பரிசான 30 ஆயிரம் ரூபாயை பூலாங்கால் SSM காதர்பாட்சா மாட்டுவண்டி தட்டிச் சென்றது.

மேலும் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகள் மற்றும் சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப் பட்டது. இதேபோன்று சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசான ரூ. 30 ஆயிரத்தை பூலாங்கால் பகுதியைச் சேர்ந்த வட்டாளம் கனி பிரதர்ஸ் மாட்டுவண்டி தட்டிச் சென்றது. இரண்டாம் பரிசான ரூ. 25 ஆயிரத்தை பூலாங்கால் அபுராக்குட்டி மாட்டுவண்டி தட்டிச் சென்றது. இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தினை போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இந்த போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று பந்தயத்தை கண்டு களித்ததுடன், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.

Tags

Next Story