உடற்கூறாய்வு செய்யாமல் உடலைக் கேட்டு உறவினர்கள் சாலை மறியல் !!

உடற்கூறாய்வு செய்யாமல் உடலைக் கேட்டு உறவினர்கள் சாலை மறியல் !!

பலி

இறந்து போனவர் உடலை உடற்கூறாய்வு செய்யாமல் தர மறுக்கும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே, உள்ள ராவுத்தன் வயல் கிராமத்தை சேர்ந்தவர் காதர் இப்ராஹிம் மகன் ஜாகிர் உசேன் (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த இரு மாதத்திற்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தவர், மீண்டும் ஜூன்.1 ஆம் தேதி சனிக்கிழமை (இன்று) வெளிநாடு செல்ல தயாராக இருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக பேராவூரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தனர். அப்போது, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர், உடற்கூறாய்வு செய்த பிறகு தான் உடலை தர முடியும் என்று கூறியுள்ளனர். அப்படி உடற்கூறாய்வு செய்யாமல், உடலை திரும்பப் பெற வேண்டும் என்றால், காவல் நிலையத்தில் தடையில்லா சான்றிதழ் பெற்று வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதுபோல் தடையில்லாச் சான்றிதழை காவல்துறையினர் தர மறுத்துவிட்டனர். இயற்கையான முறையில் மரணமடைந்த நிலையில், காவல்துறை சான்றிதழ் தரவும், மருத்துவமனை நிர்வாகம் உடலை தரவும் மறுப்பதால், ஆவேசம் அடைந்த இறந்தவரது உறவினர்கள், தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ராவுத்தன் வயல் கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில், இருநூறு பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதைடுத்து சம்பவ இடத்திற்கு பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை, சரகவருவாய் ஆய்வாளர் யோகச்சந்திரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் கமலநாதன், முத்துக்கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் கண்ணன், முகமது யாசின், பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கர், காவல்துறை ஆய்வாளர்கள் ஆனந்தராஜ் (சேதுபாவாசத்திரம்), பசுபதி (பேராவூரணி) ஆகியோர் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், உரிய விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் காவல்துறை தடையில்லா சான்று பெற்று, உடற்கூறாய்வு செய்யாமல் உடலை வழங்க அரசுத் தரப்பில் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி - சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், மறியல் காரணமாக இருபுறமும் வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் சுமார் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்து போன ஜாகிர் உசேனுக்கு திருமணமாகி பர்கானா (வயது 25) என்ற மனைவியும், இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story