அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறப்பு -உறவினர்கள் போராட்டம்
போராட்டம்
தஞ்சாவூர் கீழவாசல் சின்னையாபிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணிய பூவேந்திநாதன் (30). இவரது மனைவி கண்மணிக்கு தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை ஜனவரி 29 ஆம் தேதி பிறந்தது. இதையடுத்து, தாயும், சேயும் பொது வார்டுக்கு மாற்றப்பட்டனர். அங்கு புதன்கிழமை அக்குழந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. இது குறித்து மருத்துவரிடம் உறவினர்கள் கூறினர்.
குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் நன்றாக உள்ளது எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அடுத்த சில மணிநேரத்தில் அக்குழந்தை உயிரிழந்தது. இதனால், வேதனையடைந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தையின் இறப்புக்கு மருத்துவரின் அலட்சியமே காரணம் என்றும், தொடர்புடைய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும், முதன்மைச் சாலைக்குச் சென்று அமர்ந்தனர். அடுத்த சில நிமிடங்களில் மேற்கு காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர். பின்னர், குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் வரும் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.