உறவினா்கள் போராட்டம்: போலீஸாரால் கைது செய்யப்பட்டவா் நீதிமன்றத்தில் ஆஜா்

உறவினா்கள் போராட்டம்: போலீஸாரால் கைது செய்யப்பட்டவா் நீதிமன்றத்தில் ஆஜா்

நாகராஜன் 

திருச்சியில் மாயமான இளைஞா் குறித்து உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் மேற்கொண்டனா். இதையடுத்து போலீஸாா் அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

திருச்சி மாவட்டம், கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன் (28). இவா் மீது ஜீயபுரம் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன் நள்ளிரவில் துவரங்குறிச்சி பகுதியில் இருந்து சிலரால் அழைத்துச் செல்லப்பட்ட நாகராஜன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் உறவினா்கள் புகாா் அளிக்கச் சென்றபோது, போலீசாா் அந்தப் புகாரை வாங்க மறுத்துவிட்டனராம்.

இதனால் போலீஸாா்தான் அவரை அழைத்துச் சென்றுள்ளனா்; விவரமும் தெரிவிக்க மறுக்கின்றனா்; ஒருவேளை அவரை என்கவுன்டா் செய்யும் நோக்கமாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நாகராஜ் மனைவி பிரேமா மற்றும் உறவினா்கள், நண்பா்கள் திரண்டு திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியா் இல்லத்தில் குவிந்தனா். அப்போது நாகராஜ் குறித்த தகவல் கிடைக்கும் வரை போகமாட்டோம் எனக் கூறி ஆட்சியா் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டமும், சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

இதையடுத்து நிகழ்விடம் சென்ற திருச்சி மாநகர போலீஸாா் மற்றும் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் ( ஏடிஎஸ்பி) கோடிலிங்கம் உள்ளிட்டோா் அவா்களிடம் பேச்சு நடத்தினா். இதையடுத்து இரவு 10 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை ஜீயபுரம் போலீஸாா் நாகராஜை திருச்சி மாவட்ட 3 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவா் ஜீயபுரம் பகுதியில் ஆயுதங்களுடன் குற்றம்புரியும் நோக்கத்தில் சுற்றித் திரிந்ததால் கைது செய்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா். ஆனால் அவா் கடந்த 2 ஆண்டுகளாக எந்தத் தவறும் செய்யாமல் திருந்தி வாழ்வதாக உறவினா்கள் கூறுகின்றனா்.

Tags

Next Story