ரூ.32 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்

புயலால் பாதித்த பகுதிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.32 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை சுமார் ரூ.32 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரவு தெரிவித்துள்ள தகவலில், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தன்னார்வலர்கள் தனியார் அமைப்புகள், தனியார் கல்லூரிகள், தொழிலதிபர்கள், செய்தியாளர்கள் என பல்வேறு அமைப்பினரும் அரிசி, குடிநீர், மெழுகுவர்த்தி, போர்வைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றார்கள். அதனடிப்படையில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சென்னை மாவட்டம் புழுதிவாக்கம் பகுதிக்கு கடந்த டிசம்பர் 6-ம் தேதி அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது கட்டமாக தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும், ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சுமார் ரூ.13 லட்சம் மதிப்பீட்டிலும் நிவாரண பொருட்கள் டிசம்பர் 7மற்றும் 8ம் தேதி வண்டிகளில் சென்னை மாவட்டம் திருவெற்றியூர் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை ரூ.32 லட்சம் மதிப்பிலான பல்வேறு நிவாரண பொருட்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் தொண்டுள்ளம் படைத்தோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தில் பொருட்களை வழங்கலாம். என தெரிவித்துள்ளார்.

Next Story