சிவகங்கையிலிருந்து ரூ.37.36 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்
நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, போர்க்கால அடிப்படையில் அனைத்து சீரமைப்பு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, மேற்கண்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சீர் செய்வதற்கு, அரசுடன் இணைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களது பங்களிப்பினை ஏற்படுத்திட, தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில்,பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் தற்சமயம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்கள், வர்த்தக சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன், இன்றைய தினம் (09.12.2023) 4 கனரக வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள், ஆடைகள்,போர்வைகள், மருந்து வகைகள் உட்பட பல்வேறு வகையான நிவாரணப் பொருட்களை, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, வருவாய் துறையின் சார்பில் ரூ.27.23 இலட்சம் மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.10.13 இலட்சம் மதிப்பீட்டிலும் என ரூ.37.36 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருட்கள் சிவகங்கை மாவட்டத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கூட்டுறவுத்துறையின் சார்பில் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் சுமார் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதுபோன்று, அரசுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.