நிவாரணப் பணி: எளிமையாக பணிபுரியும் அமைச்சர்கள், அதிகாரிகள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக அருகில் உள்ள கண்மாய்கள் உடைப்பு ஏற்பட்டு மழைநீரோடு சேர்ந்து வெள்ளநீரும் இணைந்து கொண்டதால் இப்படியொரு மழையையும், வெள்ளத்தையையும் பல ஆண்டுகளாக நாங்கள் பார்த்ததில்லை, மழைநீர் தேங்காத பகுதிகளில் கூட தற்போது கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பல பெரியவர்கள் கூறுகின்றனர்.
அவ்வப்போது தொடர்ந்து மூன்று நாட்களாக சிறிய அளவில் மழைப்பொழிவு இருந்தது. அதில் பாதிக்கப்பட்டவர்களை பல பகுதிகளில் படகு மற்றும் பெரிய வாகனங்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். பல இடங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொருட்கள் மாடியில் தங்கி இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகளும் உணவு வகைகளும் போர்வை, லூங்கி, தண்ணீர் பாட்டில், பால் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் எல்லாப்பகுதிகளுக்கும் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் மேயர் ஆகியோர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
80 சதவீதம் பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக சாலைகள் துண்டிப்பு, மின்சாரம் பாதிப்பு பல பகுதிகளில் குடிநீர் குழாய்கள் உடைப்பு மற்றும் உயிரிழப்புகள், வீடுகள் சேதம், பல கடைகள் சேதம் மட்டுமின்றி பொருட்கள் முற்றிலும் சேதம் என அனைத்து தரப்பினருமே சொல்ல முடியாத துயரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். ஏழை முதல் பணக்காரர் வரை பாதிப்பை உணர்ந்து, தான் சார்ந்த தெய்வத்தை வழிபட்டு வந்தனர். தற்போதும் அது தொடர்கிறது. இந்நிலையை முழுமையாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட நிர்வாகத்திடமும் மாவட்ட அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ மேயர் ஆகியோரிடம் கேட்டறிந்து நேரடியாக தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை முழுமையாக மக்களை மீட்டெடுப்பதற்கு பணியாற்ற வேண்டும் என்ற அறிவுரை வழங்கி நிவாரண உதவிகளை வழங்கிய பின்பும் இன்றுவரை மாவட்ட நிலவரங்கள் குறித்து முழுமையாக கேட்டறிந்து வருகிறார்.
இதற்கிடையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தலைமையிலான அதிகாரிகள் குழு மாவட்டம் முழுவதும் மூன்று நாட்களாக பாதிப்புக்கு உள்ளான எல்லா பகுதிகளிலும் சென்று பார்வையிட்ட பின் மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்களிடம் செய்த பணிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முழுமையாக கேட்டறிந்து குறிப்புகளை எடுத்துள்ளார்.
இதற்கிடையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடை முன்பு அமர்ந்து தேநீர் அருந்தி அப்பகுதியில் வந்து சென்ற பொதுமக்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் கூறிய பல்வேறு பகுதிகளின் பாதிப்புக்குள்ளானவைகளை கூறியதை பொறுமையாக கேட்டறிந்து அவை நிவர்த்தி செய்வதாக அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் கீதாஜீவன், சுப்பிரமணியன், கூடுதல் தலைமை செயலளர் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், கலெக்டர் லெட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர்.
சோதனையான காலகட்டத்தில் மக்களிடமிருந்து எப்படி தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் மத்தியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு அடுத்த பணிகளை நோக்கி செல்லவேண்டிய காலகட்டாயத்தில் இருந்தபோதும் சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து மக்களோடு, மக்களாக பணியாற்றுவது, மக்கள் நலன் தான் முக்கியம் என்று கடமைக்கு பணியாற்றாமல் கடமை உணர்வோடு பணியாற்றுவது பாராட்டிற்குரிய விசயம். தற்போது வரை மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் விடுமுறை நாட்களிலும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு முத்துக்குளிக்கும் மாவட்டத்தை முழுமையாக பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான அனைத்துப் பணிகளையும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் மாமன்ற உறுப்பினர்களும், நகர்மன்ற உறுப்பினர்களும் இணைந்து மேற்கொண்டு இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.