ஊட்டி படகு இல்லம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!
படகு இல்லம் வளாகத்தில் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த 7 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டி அரசுத் தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லத்துக்கு செல்லத் தவறுவதில்லை. இதனால், இந்த இரு சுற்றுலா தளங்களிலும் உள்ளூர் மக்கள் சிலர் சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளில் சிறு கடைகளை நடத்தி வருகின்றனர். இது போன்று சாலையோரங்களிலும், நடைபாதைகளிலும் கடைகள் வைத்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாக அந்தந்த பகுதிகளில் தற்போது நிரந்தர கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டள்ளது. இருப்பினும், சிலர் தொடர்ந்து சாலையோரங்களிலும் நடைபாதைகளில் கடைகள் நடத்திவருவதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், நகராட்சி நிர்வாகத்திற்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியது. ஆனால், வியாபாரிகள் அகற்றவில்லை. இது குறித்து அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில், இன்று நகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நடைபாதைகளில் வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். அப்போது, வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அப்பகுதியில் சாலையில் மறியிலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, கலைந்துச் சென்றனர். அதன்பின், நடைபாதைகளில் வைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். படகு இல்லம் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் போது, வியாபாரிகள் சாலை மறியிலில் ஈடுபட முயன்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கக்கூடாது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் நகராட்சி நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.
Next Story