ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - வியாபாரிகள் சாலை மறியல்
திருச்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்றியதால் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி - புதுக்கோட்டை சாலையில், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், ஜெயில்காா்னா், கொட்டப்பட்டு, விமான நிலையம், செம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இப்பகுதிகளில் சாலை இருவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு இணைப்புச்சாலையும் . (சா்வீஸ் சாலை) அமைக்கப்பட்டுள்ளது. இணைப்புச்சாலையில் பேருந்துகள் நின்று செல்லவும், இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் செல்லவும் பயன்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த சாலையை தரைக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து பழக்கடை, கறிக்கடை, காய்கறி கடைகள் அமைத்து செயல்பட்டு வந்தனா். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடா்பாக பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை மற்றும் திருச்சி மாநகராட்சியிடம் புகாா் தெரிவித்திருந்தனா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை திருச்சி டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், ஜெயில் காா்னா் வரை இணைப்புச்சாலையில் ஆக்கிமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா். இதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனா். பின்னா் வியாபாரிகள் திடீரென சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து அங்கு வந்த கேகே நகா் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனா்.
Next Story