பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெரம்பலூர் நகரப் பகுதியில் போக்குவரத்து நிறைந்த புதிய பேருந்து நிலையம், நான்கு ரோடு, வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை. கடைவீதி, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, எளம்பலூர் சாலை, மற்றும் வடக்கு மாதவி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் மற்றும் கடை நடத்துபவர்கள் சாலைகளை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் அந்தந்த கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையின் குறுக்கே நிறுத்தப்படுவதாலும், கடைகளின் முன்பு அதிக ஆக்கிரமிப்பு உள்ளதாலும், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மேலும் எதிரே வரும் வாகனங்கள் விலக வழி இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி விட்டதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் அதன் உதவி கோட்ட பொறியாளர் மாயவேல் தலைமையில் நகரின் முக்கிய பகுதிகளான பாலக்கரை, புதிய பேருந்து நிலையம் மற்றும் நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகள், சிமெண்ட் காரைகள், கொட்டகை, இரும்பு ஷெட் மற்றும் தள்ளுவண்டிகள் உள்ளிட்டவற்றை அகற்றி, வாகனங்களில் எடுத்துச் சென்றனர்.
அப்பொழுது அதிகாரிகளிடமும் காவல்துறையினரிடமும் ஆக்கரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.