சத்திரம் பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் அகற்றம்
சாத்திரம் பேருந்து நிலையம்
தமிழக அரசின் போக்குவரத்துத் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் சாா்பில், திருச்சியில் சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து காற்று ஒலி மாசு கட்டுப்படுத்துதல் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு சத்திரம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலா் குமாா் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், சுற்றுச்சூழல் பொறியாளா்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள், தன்னாா்வலா்கள் இணைந்து விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, பேருந்து நிலையத்துக்கு வந்து சென்ற பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்த 10 காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்து அகற்றப்பட்டன. தொடா்புடைய பேருந்து ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கை தெரிவித்து, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.