சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் - வியாபாரிகள் வாக்குவாதம்
ஆக்கிரமிப்பு அகற்றம்
திண்டிவனம் நேரு வீதியில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் போது வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேருவீதியில் உள்ள மேம்பாலத்தில் சீரமைப்பு பணி கள் நடைபெற உள்ளது. இதையொட்டி நேரு வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து உடனே அகற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதைய டுத்து பெரும்பாலான கடைக்காரர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். ஆனால் சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வில்லை. இந்த நிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, இளநிலை பொறியாளர் ராமு தலைமையிலான ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார், வியாபாரிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story