பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடை அகற்றம்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டதால், பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தஞ்சையில், 40 ஆண்டு காலமாக இயங்கி வந்த, பழைய பேருந்து நிலையம், மாட்டு மேஸ்திரி சந்து அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடை, இப்பகுதி பொதுமக்கள், வணிகர்கள், குடியிருப்புவாசிகள், மாணவ, மாணவிகள், பெண்களுக்கு மிகுந்த இடையூறாக இருந்தது. எனவே, இந்த கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வணிகர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், கடந்த 30ஆம் தேதியுடன் கடை மூடப்பட்டது. தஞ்சை மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில், மாட்டு மேஸ்திரி சந்து வாசலில், டாஸ்மாக் கடை கடந்த 40 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்தது.

இக்கடைவாசல் வழியே மிகவும் நெருக்கடியான சந்தில் வணிகர்கள் 50க்கும் மேற்பட்டோர்கள் கடை வைத்திருந்தனர். மேலும், டாஸ்மாக் கடை வாசலிலேயே மெடிக்கலும், அதில் பல மருத்துவர்கள் மருத்துவமும் பார்த்து வந்தனர். டாஸ்மாக் கடை வழியே தான் வீரராகவா பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. மேலும், கடை அருகிலேயே கோவில், வணிகர்கள், குடியிருப்பு இருந்தது. இதன் வழியே பெண்கள் போவதற்கே அச்சப்படும் நிலை இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு டாஸ்மாக் கடை முன்பு, கடுமையான கூட்டம் திரளுவதால் வணிகர்கள் கடை நடத்த முடியாமல் மிகவும் அல்லல்பட்டு வந்தனர். இதையறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் மாட்டு மேஸ்திரி சந்து வணிகர்கள் கடந்த ஜூன் 28 ஆம் தேதி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டம் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

இதையடுத்து, கடை வாசலிலேயே டாஸ்மாக் மண்டல மேலாளர், தஞ்சை மாநகர டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 20 நாட்களுக்குள் கடையை மூடுவதாக ஒப்புக் கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும், கடை மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வந்தது. மீண்டும் ஆகஸ்டில் போராட்டத்தை அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், இரண்டு மாதத்தில் கடையை மாற்று இடம் தேர்வு செய்து, மாட்டு மேஸ்திரி சந்து டாஸ்மாக் கடையை பூட்டி விடுகிறோம் என்று உறுதியளிக்கப்பட்டது.

அதன் பின்னரும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், டாஸ்மார்க் நிர்வாகம், தஞ்சை வட்டாட்சியர் கடையை மூட நடவடிக்கை எடுக்காததால், நவம்பர் மாதம் மீண்டும் தொடர் போராட்டத்தை குடும்பத்தோடு நடத்த திட்டமிடப்பட்டது. இதன் காரணமாக டாஸ்மாக் மண்டல மேலாளர் பேச்சுவார்த்தையை நடத்தி, டிச.30ஆம் தேதி அன்று கடையை மூடுவதாக ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 31 இரவுடன் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. புத்தாண்டு மதுக்கடை இல்லாத புத்தாண்டாக இப்பகுதி மக்களுக்கு பிறந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வணிகர்களின் தொடர் போராட்டத்தினால் கடை மூடப்பட்டது. அப்பகுதி வணிகர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அப்பகுதி வணிகர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.குருசாமி, இ.வசந்தி, மாநகரச் செயலாளர் வடிவேல், மாநகரக் குழு உறுப்பினர்கள் வி.கரிகாலன், சி.ராஜன், மாட்டு மேஸ்திரி சந்து வணிகர்கள் சங்க தலைவர்கள் எம்.பாபுஜி மோகன், கனகு, அஷ்ரப் உள்ளிட்டோர் திரண்டு பொதுமக்களுக்கும், அப்பகுதி வணிகர்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர். போராட்டத்திற்கு ஆதரவளித்த வணிகர்களுக்கும், நடவடிக்கை எடுத்த டாஸ்மாக் மண்டல மேலாளர், தஞ்சை மாநகர காவல் துறை நிர்வாகம், அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story