ரூ.35 கோடியில் புராதன கட்டடங்கள் சீரமைப்பு

தஞ்சாவூர் மராட்டா தர்பார், சர்ஜா மாடி, மதுரை திருமலை நாயக்கர் மகால், தரங்கம்பாடி கோட்டை உள்ளிட்ட புராதன கட்டிடடங்களில் ரூ.35 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தொல்லியல் இணை துறை இயக்குநர் தெரிவித்தார்.

தமிழக தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம், இரண்டாண்டு கால தொல்லியல், கல்வெட்டியல், மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் ஆகிய முதுநிலைப் பட்டயப் படிப்புகளில் பயிலும் 30 மாணவர்களுக்கு, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில், வரலாற்று சின்னங்களைப் பாதுகாத்தல், புனரமைத்தல், வேதியியல் முறையில் தொல்பொருட்களைப் பாதுகாத்தல், அவற்றைக் காட்சிப்படுத்துதல் போன்றவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியையும், திட்ட பணிகளையும் ஆய்வு செய்த தொல்லியல்துறை இணை இயக்குநர் சிவானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள மராட்டா தர்பார் மண்டபத்தில் 6.25 கோடி ரூபாய், சர்ஜா மாடி 9.42 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில், சேதமடைந்த கட்டுமானத்தை சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி உள்ளிட்ட மரபுப் பொருள்களைப் பயன்படுத்தி, பாரம்பரிய முறையில் சீரமைக்கப்படுகிறது. தர்பார் மண்டபத்திலுள்ள பழைமையான ஓவியங்களை மரபுத்தன்மை மாறாத அளவுக்குத் தூய்மைப்படுத்தி, பொலிவூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மராட்டா தர்பார் மண்டப சீரமைப்புப் பணி 2025 ஆம் ஆண்டிலும், சர்ஜா மாடி புனரமைப்பு பணி ஆறு மாதங்களிலும் முடிக்கப்படும். இதே போல, சுமார் 10 கோடி ரூபாயில் மதுரை திருமலை நாயக்கர் மகால், சுமார் 7 கோடி ரூபாயில் கவர்னர் மாளிகை, தரங்கம்பாடி கோட்டை என 35 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது" இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின் போது, தொல்லியல் அலுவலர்கள் பாக்கியலட்சுமி, தங்கதுரை, இளநிலைப் பொறியாளர் தினேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story