குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி தொடக்கம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டிடங்கள் சேதமானதால், அவற்றை அகற்றி, புதிய கட்டிடங்களாக மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சில நாட்களாக மேலே போடப்பட்ட சிமெண்ட் அட்டைகள் அகற்றப்பட்டன.
பஸ்கள் உள்ளே நுழையும் பகுதி அடைக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பஸ்கள் அனைத்தும் டெம்போ ஸ்டாண்ட் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. பயணிகள் அந்த இடத்தில் இறங்கியும், ஏறியும் வந்தனர்.
பஸ் ஸ்டாண்ட் கடையினருக்கு தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இல்ல கடையினர் பலர், வாடகை நிலுவை வைத்துள்ளதால், அவைகளை உடனே செலுத்தி, கடைகளை காலி செய்து தருமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள், டூரிஸ்ட் கார்கள் மாற்று இடத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆயினும் இன்னும் அவைகள் அங்குதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக வரும் பஸ்கள், டூரிஸ்ட் கார்கள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், மார்கெட்டிற்கு காய்கறி கொண்டு வரும் சரக்கு வாகனங்கள் என பல தரப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில்,
பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றியும்,இறக்கியும் செல்ல இட நெருக்கடியாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.