நலிந்தோருக்கான கடைகள் சீரமைப்பு பணிகள் துவக்கம்
கடைகள் சீரமைப்பு
பூந்தமல்லியில் நலிந்தோருக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை கடைகளை சீரமைக்கும் பணியில், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பூந்தமல்லி நகராட்சியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள தெருவோர வியாபாரிகளுக்கு, தமிழக அரசு சார்பில், 30 கடைகள் ஒதுக்கப்பட்டன.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்த கடைகள், பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் வெட்ட வெளியில் வைக்கப்பட்டதால், துருப்பிடித்து முகப்புகள் உடைந்து பாழாகி வந்தன. நகராட்சியின் இந்த செயல்பாடு, நடைபாதை வியாபாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது குறித்து படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள்,'கிரேன்' வாயிலாக அவற்றை எடுத்து, பழுதை சரி செய்து சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
அதேபோல், அந்த பணிகள் முடித்தவுடன், ஒரு வாரத்தில் அவை தெருவோர பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என, நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.