ரூ.1.60 கோடி வாடகை நிலுவை: 4 கடைகளுக்கு மாநகராட்சி பூட்டு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு ரூ.1.60 கோடிக்கு மேல் வாடகை நிலுவை வைத்திருந்த 4 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் பூட்டு போட்டனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலுள்ள கடைகளை மாநகராட்சியானது வாடகைக் கட்டண அடிப்படையில் ஏலம் விடுகிறது. ஏலம் எடுத்த வியாபாரிகள் மாநகராட்சிக்கு குத்தகைப் பணம் செலுத்தி, மாதாந்திர வாடகை அடிப்படையில் கடைகளை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள 20 கடைகள் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்தன. இவற்றில் 4 கடைகளுக்கு வியாபாரிகள் செலுத்தியிருந்த வைப்புத் தொகையும், செலுத்த வேண்டிய வாடகைக் கட்டணமும் ஒன்றாகிவிட்டது. எனவே மீண்டும் அந்தக் கடைகளை தொடா்ந்து நடத்த அனுமதித்தால் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படும் என்பதால், கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பலரும் வாடகை செலுத்த முன்வந்தனா். இவற்றில் 4 கடைகளில் மட்டும் நிலுவை அதிகம் இருந்ததால் அவற்றை போலீஸாா் பாதுகாப்புடன் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை பூட்டி தங்கள் வசப்படுத்தினா். வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய நிலுவையை வழங்கினால், மீண்டும் அவா்களுக்கு கடைகள் ஒப்படைக்கப்படும். இல்லையெனில், வேறு நபா்களுக்கு கடைகளின் குத்தகை வழங்கப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.இதேபோல, சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளும் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

கடைகளுக்கு முன் போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆக்கிரமிப்பாகவும் இருந்த அனைத்துப் பொருள்களும் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் வியாபாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் சுமாா் 150 கடைகளுக்கு முன் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டன. இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது

Tags

Read MoreRead Less
Next Story