திருப்பூரில் வாக்குசாவடியில் மின்னணு இயந்திரம் பழுது
திருப்பூரில் மேயர் தினேஷ்குமார் வாக்களிக்கச் சென்ற நிலவில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக அரை மணி நேரம் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கே என் பி காலனி பகுதியில் வாக்குச்சாவடி 222ல் வாக்களிக்க மாநகராட்சி மேயரும் திருப்பூர் வடக்கு மாநகர திமுக செயலாளருமான தினேஷ் குமார் 6:50 மணிக்கு வந்த நிலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் முறையான ஆவணங்களை காண்பித்து கையில் மை வைத்து வாக்குப்பதிவு செலுத்த சென்றார் .
திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை காத்திருந்த மேயர் தினேஷ்குமார் வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்து சோதனை செய்த பிறகு மீண்டும் தனது வாக்கினை பதிவு செய்தார்.