சீரமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை

சீரமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை

 தடுப்புகள் அமைக்க கோரிக்கை

மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே சீரமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை.
மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே அடையாளம்பட்டு, மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் கூவம் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது, இந்த தரைப்பாலங்கள் மூழ்குவது வாடிக்கை. கடந்த 2021ம் ஆண்டு பெய்த கன மழையில் தரைப்பாலம் மூழ்கி, இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து, மதுரவாயல் ஆற்றின் குறுக்கே இரு மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'மிக்ஜாம்' புயல் தாக்கத்தால் பெய்த கன மழையில், கூவம் ஆறு கரை புரண்டு ஓடியது. இதில், மதுரவாயல் மற்றும் நொளம்பூர் பகுதியை இணைக்கும் மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் உள்ள தரைப்பாலமும், கோயம்பேடு ரயில் நகர் பகுதியை இணைக்கும் தரைப்பாலமும் உடைந்தன. பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இந்த இரு தரைப்பாலங்களும் சீர் செய்யப்பட்டன. இவற்றில், மதுரவாயல் மேம்பாலம் கீழ் உள்ள தரைப்பாலத்தின் இருபுறமும், தடுப்புகள் இல்லாமல் அபாயகரமாக உள்ளது. மேலும், அப்பகுதியில் மின்விளக்கு வசதியும் இல்லாத காரணத்தால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், கூவம் ஆற்றில் தடுமாறி விழும் அபாயம் நிலவுகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன், கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story