அறந்தாங்கி-காரைக்குடி இடையே இடைநில்லா பஸ் இயக்க கோரிக்கை!
அறந்தாங்கி-காரைக்குடி இடையே இடைநில்லா பஸ் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.
புதுகை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய நகரமாக அறந்தாங்கி உள்ளது. இங்கு ரயில் நிலையம், பஸ் நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள், பல்வேறு துறை அலுவலங்கள் உள்ளன. ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட நூற்றுக்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மக்கள் புதுகை, திருச்சி, சென்னை உள் ளிட்ட இடங்களுக்கு அறந்தாங்கி வந்தே செல்ல வேண்டும். இதனால் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் எந்த நேரமும் பஸ் போக்குவரத்தும், பயணிகள் கூட்டமும் இருக்கும்.
அறந்தாங்கியில் இருந்து ஏராளமான மாணவர்கள், அலுவலர்கள், வியாபாரிகள் காரைக்குடிக்கு சென்று வரு கின்றனர். அறந்தாங்கியில் இருந்து புறப்படும் பஸ் ஆளப்பிறந்தான், புதுப்பட்டி, பாம்பாறு பாலம், கீழா நிலைகோட்டை, சுதந்திரபுரம், கல்லுார், புதுவயல், கண்டனுார், மேட்டுக்கடை, கோட்டையூர், ஸ்ரீராம் நகர் என்று 15 முதல் 20க்கும் மேற்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்வதால் அவசர பணி நிமித்தமாக செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
இதை தவிர்க்கவும், விரைவான பயணம் மேற்கொள்ளவும் அறந்தாங்கியில் இருந்து காரைக்குடிக்கு இடைநில்லா பஸ் சேவை தொடங்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.