100நாள் வேலைத்திட்ட ஊதியத்தை வழங்க கோரிக்கை
பேராவூரணி குமரப்பா பள்ளி எதிரில், தனம் மஹாலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சேதுபாவாசத்திரம், ஒன்றிய சிறப்புப் பேரவை, நடைபெற்றது. பேரவை கூட்டத்திற்கு எஸ். சரளா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இ. வசந்தி துவக்க உரையாற்றினார்.
மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி பேரவையை நிறைவு செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நிர்வாகிகள் தேர்வு ஒன்றிய பேரவைக் கூட்டத்தில், மாதர் சங்க ஒன்றியத் தலைவராக மேனகா, ஒன்றியச் செயலாளராக சரளா செந்தில், பொருளாளராக பர்வீன் மற்றும் துணைச் செயலாளர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம் இதில், மூன்று மாதமாக நிலுவையில் உள்ள 100 நாள் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். தகுதியுள்ள விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகையை வழங்க வேண்டும். பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். குடிமனையில்லாத அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்.
மருங்கப்பள்ளம் சிவன் கோவில், காரங்குடா, சத்திரம் புதுத்தெரு பகுதியில் பெண்களுக்கான கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்ட சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி, நவம்பர் 8ஆம் தேதி, புதனன்று பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாதர் சங்க மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வசந்தி, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஆர்.எஸ். வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் மேனகா, ஒன்றியத் தலைவர் எஸ்.ஜெ.ராஜேஷ் கண்ணா, மீனவர் சங்கம் மாவட்டக்குழு சகாபுதீன் மற்றும் 250 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.