மாற்றுத்திறனாளி டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
மாவட்டப் பேரவை கூட்டம்
தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர்கள் நலச்சங்கத்தின் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டப் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூரில் நடைபெற்றது. பட்டுக்கோட்டை கோட்ட பொறுப்பாளர் கந்தசாமி வரவேற்றார். மாநில கவுரவத் தலைவர் செல்வராஜ், மாநில அமைப்புச் செயலாளர் கருணாநிதி, மாநில துணைச் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை வகித்து மாநில பொதுச் செயலாளர் பி.அரியகுமார் சிறப்புரையாற்றினார். நிறைவாக தஞ்சாவூர் மாவட்ட துணைச் செயலாளர் வெற்றிவேந்தன் நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மேகநாதன், தஞ்சாவூர் மாவட்ட பொருளாளர் புலேந்திரன், தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் குமார், தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: "தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் சுமார் 600 மாற்றுத்திறனாளிகள் கடந்த 21 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் மாற்றுத்திறனாளிகள் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவதால், இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசின் பிற துறைகளிலோ அல்லது டாஸ்மாக் நிர்வாகத்திலோ பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வெகு தொலைவுகளுக்குச் சென்று பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது இருப்பிடத்தின் அருகிலேயே உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்ற பணியிட மாறுதல் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் கை போன்ற உபகரணங்கள் வாங்க மருத்துவ நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள் திடீரென இறக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசின் பிற துறைகளில் வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். இச்சங்கத்தின் சார்பில் ஜூன் மாதம் திருச்சி அல்லது தஞ்சாவூரில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்பது" என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.