ஆபத்தை விளைவிக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை
சாய்ந்து விழும் நிலையில் உள்ள புளியமரம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி - அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் முற்றிலும் காய்ந்த நிலையில் புளியமரம் ஒன்று ஆபத்தை விளைவிக்கும் விதமாக சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. குடியிருப்பு பகுதியான இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் வாங்குவதற்கும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இந்த வழியாக கடந்து செல்வது வழக்கம். மேலும் போக்குவரத்து நெரிசலான பகுதியான இங்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரம் முற்றிலும் பட்டுப்போன நிலையில் உள்ளது.லேசான காற்று மற்றும் மழை நேரங்களில் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து இந்த பகுதியில் வசிக்கும் சிக்கந்தர் கூறும்போது, "நான் சின்னப்பையனா இருக்கும் போது இந்த வழியா பள்ளிக்கூடம் போவேன். புளியமரத்துல புளியங்காய் நிறைய காய்த்து கிடக்கும் நாங்க கல்லால் அடித்து புளியங்காய் பறிப்போம். இப்போ மரத்துக்கு வயசாகி காய்ந்துவிட்டது. இப்போ அந்த மரத்துப்பக்கம் போகவே பயமா இருக்கு. எப்போ கிளை முறிந்து தலையில் விழுமோன்னு அச்சமா இருக்கு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் நீங்க பேசி இந்த மரத்தை அப்புறப்படுத்த உதவி செய்யனும்" என்றார். சாலைக்கு மிக அருகில் சாய்ந்து நிற்கும் மரத்தால் பொதுமக்கள் மற்றும் சாலையை கடக்கும் வாகனங்கள் மீது விழுத்து ஆபத்தை விளைவிக்கும் முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.