அண்ணா விளையாட்டரங்கில் கட்டண வசூல் தடைசெய்ய கோரிக்கை
குமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்க நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அண்ணா விளையாட்டரங்க நலச்சங்கம் சார்பாக விளையாட்டு அரங்கத்திற்கு பயிற்சிக்கு வரும் மாணவ மாணவிகள் வீரர், வீராங்கனைகள், பெரியோர்கள் என அனைவரும் பயன்படுத்தும் விதமாக முதலுதவி பெட்டி மருந்துடன் விளையாட்டு அரங்கத்தில் பொருத்த 13-02-2024 ல் வழங்கப்பட்டது. ஒரு மாதம் ஆகியும் இதுவரை முதலுதவி பெட்டியை பயிற்சிக்கு வருபவர்கள் பயன்பாட்டுக்கு வைக்கவில்லை.
ஆகையால் முதலுதவி பெட்டியை உடனடியாக பயிற்சிக்கு வருபவர்கள் பயன்பாட்டிற்கு பொதுவெளியில் வைக்க வேண்டும். மேலும் விளையாட்டு பயிற்சிக்கு வரும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பொதுமக்கள் என அனைவரிடமும் கட்டாய கட்டணம் செலுத்த அறிவுறுத்தியதை கண்டித்து 28-10-2017 ல் அன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் ராஜன்,
ஆஸ்டின், ராஜேஷ் குமார், பிரின்ஸ் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் என கலந்து கொண்டு போராட்டம் நடத்தியதன் விளைவாக கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மீண்டும் கட்டணம் வசூலிக்க முயற்சித்தபோது 08-09-2023 ல் அண்ணா விளையாட்டரங்க நலச்சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தி மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கட்டணம் கேட்டு அனைவரையும் வற்புறுத்தி வருகின்றனர்.
மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்து கட்டணம் கொடுத்து பயிற்சிக்கு வர வசதி இல்லாத நிலையில் விளையாட்டு பயிற்சிக்கு கட்டணம் என்பது அவர்களின் திறமையை வெளிப்படுத்த தடையாக அமைந்து விடும் என்பதால் உடனடியாக பயிற்சிக்கு கட்டணம் கேட்பதை நிறுத்த கேட்டு மீண்டும் ஒருமுறை நலச்சங்கத்தின் சார்பில் பயிற்சிக்கு வருபவர்களின் நலன் கருதி மனு அளிப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் செயலாளர் ஜெ.ஜெயின் ஷாஜி, பொருளாளர் குத்தாலிங்கம், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் கணேசன், முத்துராமலிங்கம், முருகேசன் மற்றும் நிர்வாகிகள் உட்பட புதிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.