தஞ்சாவூர், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாக பிரிக்க கோரிக்கை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க 8 ஆவது தஞ்சாவூர் மாவட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை மாலை, தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் இரா.இராசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பா.ஆண்டனி ஜான் பிரிட்டோ வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கை.கோவிந்தராஜன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் ந.தேசிங்கு ராஜன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் யோ.ஜெயந்தி இரங்கல் தீர்மானம் வாசித்தார். மாவட்ட நிர்வாகிகள் க.சாமிநாதன், க. செல்வேந்திரன், கா.சிவசண்முகம், ம.இளையராஜா, கஜேந்திரன், து.கார்த்திகேயன், ரெ.சத்தியமூர்த்தி, செந்தில், ரமேஷ், பி.முரளிதரன் உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பால்ராஜ் நிறைவுறையாற்றினார்.
மாவட்ட தணிக்கையாளர் பாஸ்கர் நன்றி கூறினார். தீர்மானம் கூட்டத்தில், "பொதுமக்கள் நலன் கருதியும், வளர்ச்சித் திட்டப் பணிகளை திறம்பட செயல்படுத்திடவும், தஞ்சாவூர், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாக பிரிக்க வேண்டும். கும்பகோணம் கோட்டத்தில் புதிதாக ஒரு ஊராட்சி ஒன்றியத்தினை உருவாக்க வேண்டும்.
5000 மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க வேண்டும். தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளை தஞ்சை மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும், இருப்பு வைக்கப்படும் இடங்களையும் கண்டறிந்து காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு, நிதி விடுவிக்கப்பட்டு, இதுவரை வீடு கட்டாத பயனாளிகளிடமிருந்து நிதியினை மீள் வசூல் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
புறவழிச் சாலைகளில் நகர்ப்புறங்களில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் குப்பைக்கழிவுகளை, தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சிகள் மூலமே அகற்ற உரிய அறிவுரை வழங்க வேண்டும். டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள் அதிக அளவில் உள்ளது. இவற்றில் அடிக்கடி செடி, கொடிகள் மண்டி தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வாய்க்கால்களையும் தூர் வாருவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் தென்னை மரங்களுக்கு வட்ட வடிவ பாத்தி கட்டுதல், தென்னங்கன்றுதல் நடுவதற்கு குழிகள் அமைத்தல் ஆகிய பணிகளை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும், ஊரக வளர்ச்சி இயக்குனரையும் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.