மருத்துவமனையில் கழிவுநீர் குழாய் உடைப்பை சரி செய்ய கோரிக்கை
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கழிவுநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி கோரிக்கை மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
மருத்துவமனை கட்டிடத்தில் 4வது தளத்தில் கழிவு நீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் மழைச்சாரல் போல் கீழே நடந்து செல்லும் பொது மக்களின் மேலே படுகிறது. மேலும் வழி நெடுகிலும் இந்த மருத்துவமனை கழிவு நீர் பரவி துர்நாற்றம் வீசுகிறது. அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளும் அவர்களுடன் பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
மேலும் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை வார்டுக்கு இந்தக் கழிவு நீரில் நடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த மழைக்காலத்தில் காய்ச்சல் போன்ற வியாதிகள் பரவி வருகின்ற இந்நேரத்தில் இதனால் நோயாளிகள் மட்டுமல்லாது அவர்களுடன் வருபவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் இந்தக் கழிவு நீரால் ஏற்படுகிறது. நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் கருதி இந்த கழிவுநீர் குழாய் உடைப்பை சரி செய்து மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.